🙏 *கம்பர் கவி மலர்*🙏 5 - 12- 19
ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!
இவ் வார கவி மலரில் அதிகம் கவனிக்கப்படாத -பரிதாபத்திற்குரிய *மண்டோதரி* என்னும் பாத்திரப்படைப்பினை பகிர்ந்து மகிழ்வோம்.
மண்டோதரி ராவணனின் மனைவி.
மயன் என்னும் தேவதச்சனின் திருமகள்.
அழகும்,ஒழுக்கமும் ஒருங்கே இணைந்த அற்புத பாத்திரப் படைப்பு.
மண்டோதரி என்னும் சொல்லுக்கு மென்மையான வயிறை உடையவள் என்று பொருள்.
அவள் உள்ளமும் அரக்கர் குலத்திற்கு மாறான மென்மை உடையது.
தன் ஒத்த சீதைக்கு தன் கணவன் ராவணன் செய்த தீங்கை எண்ணி,எண்ணி கண்ணீர் வடித்தாள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீதையை ராமனிடமே விட்டு வாருங்கள் எனக் கதறி மன்றாடினாள்.
எத்தனை முறை எடுத்துச் சொன்னாள்!
தாடகையை,சுபாகுவை,கர தூஷணர்களை கொன்று அழித்தவன் மாவீரன் ராமனே!
அது மட்டுமா
வலிமை நிறைந்த வாலியையும் கொன்றவன் அல்லவா என்றெல்லாம் எடுத்து இயம்புகிறாள்.
ஒரு காட்சி
ராவணன் மலையே கீழே விழுந்தது போல மாண்டு கிடக்கிறான்.
புலம்புகிறாள் மண்டோதரி.
எம் நாதனே!
நேற்று கூட ராமனை புகழ்ந்தீர்களே!
"இன்று போய் நாளை வா" என்ற ஸ்ரீ ராமனின் பெருங்குணத்தை உருகி,உருகி உரைத்தீரே!
அதன் பிறகு கூட சீதையை அவரிடம் ஒப்படைத்து இருந்தால் இந்த நிலை உமக்கு நேர்ந்திருக்காதே!
மண்டோதரியின் கதறல் படிப்போரின் மனதை கரைத்து விடுகிறது.
நீ செல்வதற்கு முன் நான் செல்ல வேண்டும் என நினைத்தேனே! தப்பாகிப் போய்விட்டதே
அதனால் தான் உம் தலைகள் வீழ்ந்துபட்டனவோ என்னென்று சொல்வேன்!
மேலும் என் கணவன் கயிலையையே தூக்கியவன்.
அம் மாவீரனின் அழகிய உடலில் எள் இருக்கும் இடம் கூட இல்லாமல் ராமனின் அம்புகள் துளைத்தனவே!
அதற்குக் காரணம் இப்படி இருக்குமோ.
தன் கணவனின் உயிரைக் கவர்ந்த அம்பினைக் காண வேண்டும் என்பது மண்டோதரியின் விருப்பம்.
தம் மணாளனைக் கொல்ல அம்பு ஒன்று உலகிலேயே இல்லை என்றே நினைத்திருந்தாள்.
சுற்றும் முற்றும் அம்பைத் தேடிப் பார்க்கிறாள்.காணவில்லை.
அம்பு காணாமைக்கு காரணம் தேடிக் கண்டுபிடிக்கிறாள்.
அன்று சூர்ப்பணகையின் வருணனையால் தம் அகச் சிறையில்(இதயத்தில்) சீதையை வைத்து விட்டான் ராவணன்.
இன்று இராமன் விட்ட அம்பு அசோகவனத்தில் புறச்சிறையில் இருந்த சீதையை மீட்டுவிட்டது.
புறச்சிறையில் இருந்து மீட்ட ஜானகியை ராவணனின் அகச்(இதயம்)சிறையில் இருந்தும் மீட்க வேண்டும் என்பதற்காக உடலின் உள்ளேயே அம்பு தங்கிவிட்டதோ என்று புலம்புகிறாள்.மேலும் ராவணனின்
காதலை அவன் உள்ளேதேடி தேடி
தடவுகிறதாம் அம்பு.
கவியரசரின் கவி நயம் நம்மை பெருமிதம் கொள்ளச்செய்கிறது.
*"வெள்ளெருக்கஞ் சடை முடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்* *எள் இருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ?*
*கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்* *உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.*
சீதாப் பிராட்டிக்கு நிகராக எண்ணற்ற நற் குணங்கள் பெற்றிருந்தாலும் கணவனின் தீய குணத்தால் மண்டோதரியின் பெருமை பேசப் படாமலேயே போய்விட்டது.
நற்குணவதியாக விளங்கினாலும் காலங்காலமாக வாழ்ந்து மறைந்த மங்கையர்களின் ஒட்டுமொத்த துயரமாகத் தான் மண்டோதரியைப் பார்க்க முடிகிறது.
*கம்பர் புகழ் வாழ்க!*
கவி மலரின் மணம் தொடரும்!
தே.இரா.வீரராகவன் ✍