🙏🏽 *கம்பர் கவி மலர்*🙏🏽
ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!
இவ் வார கம்பர் கவி மலர் ஒன்றினை பகிர்ந்து மகிழ்வோம்!
விஸ்வாமித்ரர் தாம் செய்ய இருக்கும் வேள்வியை பாதுகாக்க இராமனை அழைத்துச்செல்ல தசரதனின் அவைக்கு வருகிறார்.
முதலிலேயே ராமனை என்னுடன் அனுப்பு என கேட்டு விட்டால் தசரதன் உடன்பட மறுத்துவிடுவான் என்பதற்காக மன்னனின் மனம் மகிழும்படியாக புகழ்ந்து சிலவற்றை கூறுகிறார்.
தயரத சக்கரவர்த்தியே!
இந்திரன் சம்பராசுரனிடம் ஆட்சியை இழந்துவிட்டு உன்னிடம் வந்து உன் அரசாட்சியில் ஒதுங்கி நின்று தன் ஆட்சியை மீட்டுத்தரும்படி யாசித்து வேண்டினான்.
அவன் யாசித்தலுக்கு இரங்கி சம்பராசுரனோடு போரிட்டு அவனையும் அவன் கூட்டத்தையும் அழித்து ஒழித்தாய்!!
தேவர் உலகை மீட்டு இந்திரனுக்கு கொடுத்தாய்!
நீ கொடுத்த உலகை கொண்டுதான் இந்திரனே இன்று அரசாட்சி செய்கிறான்.அத்தகைய மாமன்னன் அல்லவா நீ என முனிவன் கூறுகிறான்.
முனிவனின் வார்த்தைகளை கேட்ட அளவில் தசரதன் தன்னை மறந்தான்!
புகழ்ச்சியில் தன்னை இழந்தான்!
பிறகு தன் நிலை உணர்ந்தான்.!
கை கூப்பி வணங்கி நிற்கிறான்!
தவ சிரேஷ்டரே! மா முனிவரே! !
தாங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்! காத்து இருக்கிறேன். கூறி அருள்வீராக! என்கிறான்.
முனிவன் கூறத்தொடங்குகிறான்:
குளிர்ச்சியான மரங்கள் நிறைந்த காட்டில் நான் தவ வேள்வி செய்ய இருக்கிறேன்.
அவ் வேள்விக்கு காமம்,வெகுளி என்னும் மயக்கத்தைப் போல இடையூறு செய்ய அரக்கர்கள் காத்திருக்கிறார்கள்.
அவர்களோடு போர் புரிந்து, அழித்து எம் தவ வேள்வியை காக்க வேண்டும்.
அதற்கு உன் புத்திரர் நால்வரில் கரிய செம்மல் *ஒருவனை* என்னுடன் வர அளிக்க வேண்டும் என முனிவர் கேட்கிறார். (பரதனும் கரிய செம்மல்தான். ஆனால் அவன் இல்லை என்று( ஒருவன் -ஒப்பற்றவன் -ராமன்)
ராமனையே அளிக்க வேண்டும் என்கிறார்.
முனிவர் கேட்டவுடன் தசரதனின் மன நிலை எப்படி இருந்ததாம்!
எமன் உயிரை மட்டும்தானே எடுத்துச்செல்வான். ஆனால் இம் முனிவனோ உயிரோடு,உடலையும் எடுத்துச்செல்லும் கொடும் கூற்றுவனாக (எமன்) அல்லவா இருக்கிறான் என நினைக்கிறாராம்.
விசுவாமித்திரனின் நயம்பட உரைத்த பண்பும்,தசரதனின் நிலைமையினையும் சொல் ஓவியமாக வடித்த கம்பனின் புலமையை வியந்து நிற்கிறோம்!!
*பாடல்*
*தருவனத்துள் யான் இயற்றும் தவ வேள்விக்கு இடையூறா,* *தவம் செய்வோர்கள் வெருவரச்சென்று அடை காம வெகுளி என,* *நிருதர் இடை விலக்காவண்ணம்*
*"செருமுகத்துக் காத்தி"* *என நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி* *என உயிர் இரக்கும் கொடும் கூற்றின் உளையச் சொன்னான்.*
*இணைப்பு* :கானகத்திற்கு இராமனைக் கேட்கிறாரே வெயிலால் தன் குமாரனுக்கு துன்பம் வந்து விடப்போகிறதே என நினைத்துவிடுவானோ என நினைத்து குளிர்ந்த மரங்கள் நிறைந்த *தருவனத்துள்* என்றார்.
வேறு முனிவர்கள் இயற்றும் தவத்தின் காவலுக்காக கூப்பிடுகிறாரே என நினைத்து விடாமல் இருக்கக *யான் இயற்றும் தவ வேள்விக்கு* என்றார்.
கம்பனின் சொல் ஆட்சியை வியக்காமல் இருக்க முடியவில்லை.
*கம்பன் புகழ் வாழ்க!!
மலரும்.
தே.இரா.வீரராகவன்.