Showing posts with label kamban. Show all posts
Showing posts with label kamban. Show all posts

Thursday, October 31, 2019

கம்பன் கவி மலர் - 31-10-2019

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம் !

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!!

அயோத்யா காண்டத்தில் ஒப்பற்ற பாத்திரப் படைப்பாக குகப்பெருமானை உலவ விடுகிறான் கம்பன்.

குகப்படலம் இல்லாவிட்டாலும் இராமாவதாரம் (இராமாயணம்) தடையின்றிச் செல்லக்கூடியது தான்.
ஆனால் குகன் மூலமாக கம்பன் வலியுறுத்த நினைப்பது பகவத் -பாகவத உறவை - மேன்மையை உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதில் தான் உள்ளது.

தலை முதல் கால் வரை அன்பின் பிழம்பாக, அன்பைத்தவிர வேறொன்றும் அறியாத அற்புதப் படைப்பு குகன்.

பொதுவாக அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் குகனைப் பொருத்தவரை முன்னோர் மொழியையே மாற்றி விடுகிறான்.
புறத்தே கடுமையான பார்வை ,முரட்டுத்தோற்றம் ஆனால் அகத்தே அன்பே வடிவாகக் காட்சி அளிக்கிறான்.

கம்பன் காட்டும் *குகனில்* அன்பின் வழி செல்கிறவர்களுக்கு கல்வி,கேள்வி தேவையில்லை என்பதை உணர்த்தி விடுகிறான்.
*அன்பின் வழியது உயி(ய)ர் நிலை* என்ற குறளுக்கும் இலக்கணம் ஆகி விடுகிறான்.

*ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது,இரங்கி மற்று அவற்கு இன்னருள் சுரந்து* என்ற ஆழ்வாரின் பாசுரத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் குகன் என்ற பாத்திரத்தை படைத்து இருக்கிறான் கம்பன் என்றாலும் மிகையில்லை.

கங்கையில் குகன் படகு ஓட்ட இராமன்,சீதை,இலட்சுமணன் ஆகியோர் பயணித்துக்கொண்டு இருக்கின்றனர்.

இராமன், குகனிடம் சீதையைக்காட்டி இவர் உன் கொழுந்தி என்கிறான்.
இலட்சுமணனைக் காட்டி 'இவன் உன் தம்பி என அறிமுகப்படுத்துகிறான்.அறிமுக நிகழ்ச்சியில் அரச குடும்பம் அல்லாத பாத்திரங்களில் குகன் பெறக்கூடிய சிறப்பே அலாதி தான்.
இந் நிகழ்ச்சியை பிற்காலத்தில் கேள்விப்படுகின்ற பரதனும், கோசலையிடம் அறிமுகப்படுத்தும் போது *"இன் துணைவன் இராகவனுக்கு;இலக்குவற்கும்,இளையவற்கும்,எனக்கும் மூத்தான்"* என்கிறான்.

இராமன் முதலான சகோதரர்கள் குகனிடம் கொண்ட மதிப்பு இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

முதன் முதலாக கானகத்தில் காருண்ய மூர்த்தியாம் கார்மேக வண்ணனை காண வருகிறான் குகன்.

அண்ணலும் குகனின் வருகையை விரும்பி இளையோனிடம் அழைத்து வா எனச் சொல்ல
குகனும் உள்ளே வந்து தன் இருள்நிற தலைமுடி பூமியில் வீழுமாறு வீழ்ந்து உடம்பினைக் குறுக்கிக்கொண்டு பணிந்து மகிழ்ந்து நிற்கிறான்.

பின்னர் இராமன் *இருத்தி ஈண்டு* (இங்கே அமர்க) எனச் சொல்ல குகனோ அடக்கத்துடன் அமர மறுக்கிறான்.  
 இருத்தி என இராமன் கூறுவதை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை.   ஆம்
 உயர்வு தாழ்வு பாராட்டாத ,உயர்ந்த சமுதாய நிலையை இராமன் மூலமாக உணர்த்தி வெற்றியும் கண்டுவிடுகிறான் கம்பன்.

நிற்க,
 
பெரியோரைக் காணச் செல்லும்போது மிக உயர்ந்த பொருளைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தேனில் ஊற வைத்த மீனை எடுத்துக்கொண்டு இராமனிடம் செல்கிறான்.
இவ்வுணவை இராமன் உண்பானா,மாட்டானா என்பது குகனுக்குத் தெரியாது.

இறைவனுக்கு படைப்பது போல் எடுத்துக் கொண்டு வருகிறான்.

ஐயனே,மீனையும் தேனையும் பக்குவப்படுத்தி தங்களுக்கு சமர்ப்பிக்க வந்திருக்கிறேன்.
தங்களுக்கு விருப்பம் எதுவோ அதன்படி செய்வீராக! என வேண்டி நிற்கிறான்.

*தேனும்,மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத் திருத்தினென் கொணர்ந்தேன்: என் கொல் திருவுளம்?"*
என்பது கம்பன் வரிகள்.

முனிவர்கள் இக்காட்சியைக் காண்கிறார்கள்;அதிர்ச்சி அடைகிறார்கள்: முகம் சுளிக்கிறார்கள்.
ஆனால் சூழலை அழகாக சாதுர்யமாக இராமன் தீர்த்து வைக்கிறான்.

எப்பொருளும் அன்பினால்,பக்தியால் கொண்டு வரப்பட்டவை என்றால் *பவித்திரமான* தூய பொருட்களே. மேலும் எம் போல் தவம் மேற்கொண்டவர்களும் ஏற்றுக்கொள்ளுதலுக்கு  உரியன தான்.
இனிமையாக நாமும் உண்டதற்குச் சமானம் ஆகும் என்கிறான் பெருமான்.

குகனையும் திருப்தி அடையச்செய்து,முனிபுங்கவர்களையும் மன நிறைவு கொள்ளச்செய்த இராமனின் உரையால் கம்பனின் ஏற்றம் மேலும் மேலும் பளிச்சிடுகிறது.

இறைவனை அடைவதற்கு -அவன் அன்பைப் பெறுவதற்கு குகனையே பாடமாகக் கொள்ளவேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறான் கம்பன்.

*அரிய,தாம் உவப்ப,உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்* *தெரிதறக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே?* *பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம்; எம்மனோர்க்கும் உரியன:* *இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ?'* *என்றான்.*

கம்பர் கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன்