Wednesday, January 22, 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏
ஸ்ரீ  ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!!

போர்க்களத்தில் ஸ்ரீ ராமச்சந்திரனுடன் விபீஷணனும் நிற்கிறான்.
களத்தில் வீரத்துடன் எதிரே நிற்பவனைப் பார்த்த ராமன் விபீஷணா! இவன் யார் எனக் கேட்கிறான்.

இவர் நீதிகள் முழுதும் அறிந்த கும்பகர்ணன்.எனக்கு மூத்தவர்.  ராவணனுக்கு இளையவர்.தன் தமையனுக்கு புத்திமதிகள் பல கூறியும் அவர் கேட்காமையால் தமையனுக்காக போர் புரிய வந்துள்ளார்.

இதனைக் கேட்ட ராமனும் கொடியவனுக்காக உன் தமையன் கும்பகர்ணன் ஏன் உயிரை விட வேண்டும்.அவரை இங்கே அழைத்து வருக எனச் சொல்கிறான்.

இதனைக் கேட்ட விபீஷணனும் மகிழ்ச்சியுடன் கும்பகர்ணனிடம் சென்று வணங்கினான்.

கும்பகர்ணன், இராமனுடன் இருக்க மனமில்லாது நம்மிடமே வந்துவிட்டான் விபீஷணன் என நினைத்து
அவனை மார்புடன் இறுகத் தழுவிக்கொண்டு தம்பி!, "நீ ராகவனிடம் சரண் அடைந்துவிட்டாய்!இம்மையிலும்,மறுமையிலும் நன்மை பெற்றுவிட்டாய் என்றல்லவோ நினைத்தேன். அப்படி இருக்க காலன் வாயில் நுழைய இருக்கும் என்னை நோக்கி ஏன் வந்தாய்?
             மேலும்

நாங்கள் மடிந்த பிறகு நீ இருந்தால்தானே எங்களுக்கு எள்ளும்,நீரும் இறைத்து பிதுர்க் கடனை ஆற்ற முடியும்.

ஆகவே நீ ராமன் பக்கம் சென்றுவிடு என கும்பகர்ணன் மன்றாடுகிறான்.

இதனைக் கேட்ட விபீஷணன், அண்ணா!  நான் இராமனைப் பிரிந்து வந்துவிடவில்லை.
நீங்கள் ஞானத்தில் சிறந்தவராகவும்,நீதியில் வல்லவராகவும் இருப்பதால் உம்முடைய மரணத்தை தடுத்து, ஸ்ரீ ராமனின் பக்கம் சேர்த்து அழியா பேரின்பம் பெற அவனுடன் சேர்த்து விடலாம் என வந்தேன்.

தாங்கள் சம்மதித்தால் என்னைக் காப்பது போலவே தங்களையும் காத்து அருளுவார்.
அவரால் எனக்களிக்கப் பட்ட இலங்கை அரசை நான் உம்முடைய திருவடிகளில் அளித்துவிட்டு, ஏவல் செய்ய காத்து இருக்கிறேன் என சொல்லுகிறான்.

இதனைக் கேட்ட கும்பகர்ணன், பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே 
என் கண்ணின் மணியே! விபீஷணா!

என்னை நீண்டகாலம் எத் துன்பத்தையும் கொடுக்காமல் சுகமாக வளர்த்தான் ராவணன்.
அவனே தன் கையாலேயே நெற்றிக்குத் திலகமிட்டு போர்க்கோலம் அணிவித்து போருக்குச் சென்று வா என அனுப்பி இருக்கிறான்.

அந்த அண்ணனுக்காக போருக்குச் செல்வேனா! அதை விட்டு *நீர்க்கோல வாழ்வை நச்சி*(நீரால் வரையப்பட்ட கோலத்தைப் போன்ற நிலையில்லாத வாழ்வை விரும்பி) எதிர் அணியில் சேருவேனா!

இதுவரை உயிருக்கும், உடலுக்கும் உரமூட்டிய அவனுக்காக செஞ்சோற்றுக் கடனை தீர்ப்பது தானே நீதி! நியதியும் கூட

நீரில் எழுதப்பட்ட அல்லது நீரால் எழுதப்பட்ட கோலம் போன்ற நிலையில்லாத செல்வ வாழ்வை விரும்பி தமையனுக்கு உயிரைக் கொடுப்பதில் இருந்து  பின்வாங்க மாட்டேன் என்று கும்பன் கூறுவது ஞானத்தால் பக்குவப்பட்டவன் அவன் என்பது தெளிவாக விளங்குகிறது.அது மட்டுமில்லாமல் தியாகத்தின் திருவுருவாய் காட்சியளித்து படிப்போரை கலங்க அடித்து விடுகிறான்.

தம்பீ, என் துன்பத்தைக் களைய வேண்டும் என நீ நினைத்தால் கார்முகில் வண்ணனாகிய இராமனை விரைவில் சென்று அடைவாய் என உரைக்கிறான்.

*நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்* 
*போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர்க்கொடாது அங்குப் போகேன்*
*தார்க் கோல மேனி மைந்த: என் துயர் தவிர்தியாகில்*
*கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் என்றான்"*

விபீஷணனுக்கும்,கும்பகர்ணனுக்கும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கம்பன் ஆளும் நீர்க்கோல வாழ்வை விரும்பி என்னும் தொடர் மூலம் நம்  உள்ளத்தை  கொள்ளை கொண்டு விடுகிறான்.

நீ இராமனைத் தான் சென்று அடைய வேண்டும் என்ற கும்பனின் உறுதி சகோதர பாசத்தின் உச்சத்தையே தொட்டுவிடுகிறது.நம் நெஞ்சையும் நெகிழ வைத்து விடுகிறது.

*கம்பன் புகழ் வாழ்க*

   கம்பன் கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன் ✍
16 - 01- 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏
ஸ்ரீ  ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

வாலிக்கும்,சுக்ரீவனுக்கும் மற்போர் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.ஒரு கட்டத்தில் சுக்ரீவனை வாலி மிக தீவிரமாக தாக்கினான்.

சுக்ரிவன் என்ன செய்வதென்று தெரியாமல் தீனமாக ராமனை நோக்கினான்.

அந்த நேரத்தில் ராமன் தமது கோதண்டத்தில் அம்பினைத் தொடுத்து வாலியின் மார்பில் விட்டான். அக் கணத்தில்
வாலி தனது கைகளில் பற்றியிருந்த சுக்ரீவனை நழுவவிட்டான். தன்

மார்பில் பாய்ந்த அம்பினை இறுகப் பிடித்துக்கொண்டான்.

கலங்கி,களத்தில் சாய்ந்தான் வாலி.
நமக்குத் தெரியாமல் இந்த அம்பினை எய்தவன் யாராக இருக்கக் கூடும் என யோசனையில் ஆழ்கிறான்

அம்பினை ஆவேசத்தில் முறித்தெறிய முயலுகிறான்.
முறிக்க முடியவில்லை.

அம்பின் அடிப்புறத்தைப் பார்க்கிறான்.
ஆடிப்போய் விடுகிறான்..அவன் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறான்.  ஆம்.
முற்றிலும் எதிர்பாராத ஏற்பட்ட நிகழ்வு .அம்பில்
ராமன் என்னும் பெயர் பொறித்திருப்பதை கண்டான்.
கவியரசர் கூறுவதைப் பார்ப்போம்.
*மும்மைசால் உலகுக்(கு) எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்* *தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே* *இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும்* *செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்.*
(பிறகு வாலியின் கேள்விகள்  -இராமனின் உரைகள் பல பாடல்களில் வருகின்றன.இதனை பிறகு பார்ப்போம்.)

இராமன் என்னும் நாமம் தன்னை கண்களால் தெரிந்து கண்டான்  என்று சொல்லாமல் கண்களில் தெரியக் கண்டான் என்று கம்பன் சொல்வதற்கு நுட்பமான பொருள் உண்டு.

தெரிந்து கண்டான் என்பது முயற்சி செய்து தேடிக் காணுதல்.

தெரியக் கண்டான் என்பது முயற்சி எதுவும் இல்லாமல் பரம்பொருளே தன்னை நாடி வந்து (அருளுவது)காண்பது.

ஆதி நாயகனாம் இராமனை அறிந்து கொள்ள வாலி முயலவில்லை.
தன் பெயர் பொறிக்கப்பட்ட அம்பை ராமன்  அனுப்பி தன்னைக்காட்ட 
வாலி கண்டான்.

மேலிருந்து கீழே இறங்கி கீழே இருந்த வாலியை மேலே(பரம பதத்திற்கு) அழைத்து செல்ல முயல்வதை சொல்லும் சொல்தான் தெரியக் கண்டான். 

கண்களில் தெரியக் கண்டான் என்ற கவிச் சக்கரவர்த்தியின் பொருள் ஆழம் மிக்க வரிகள் நினைத்து மகிழத் தக்கது.

*சிறியன சிந்தியாதான்* ஆகிய வாலிக்கு மோட்சம் அருளுவது தான் ஸ்ரீ ராமபிரானின் குறிக்கோள்.
வாலி வதைப் படலம் என்பதை வாலி மோட்சப் படலம் என்றாலும் பொருத்தமே.

*கம்பர் புகழ் வாழ்க!*

கம்பர் கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன். ✍
23-01-2020

Tuesday, January 14, 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏      12-12-19

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்! 

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

இவ் வார கவிமலரில் *அமிழ்தின் தோன்றிய வேயிடைத் தோளினாள்* *"மயிலியற் குயின்மொழி"மின்னெனத் திகழும் மெய்யாள்" "இசையினும் இனிய சொல்லாள்"* என்று கம்பனால் புகழப்பட்ட *தாரை* யைப் பற்றி பகிர்ந்து மகிழ்வோம்.

இராம காதையில் குறைந்த பாடல்களில் தாரை பேசப்பட்டாலும், நிறைந்த அளவில் படிப்போர் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகிறார்.

கம்பன் மூன்று காட்சிகளாக தாரையை நம் மனத் திரையில் உலவ விடுகிறார்.

சுக்ரீவன் தன் உள்ளம் முழுவதையும் வாலி என்ற  அச்சத்தால் நிரப்பியவன்.t
வாலியின் வல்லமை முழுவதையும் அறிந்தவன்.
அதனை அனுபவித்தவனும் கூட.

வாலியின் தாக்குதலுக்கு அஞ்சி சுக்ரீவன் ஒளிந்து இருந்தான்.

திடீரென்று ஒரு நாள் வாலியைப் போருக்கு அழைக்கிறான்.
சுக்ரீவனின் போர்க்குரலைக் கேட்ட அளவில் வாலி மிக்க சினம் கொண்டு போருக்கு புறப்பட்டான்.

வாலியின் மனைவி தாரை சூழ்நிலையை புரிந்து கொள்கிறாள்.
எம் தலைவரே!  செல்வதை தடுப்பதாக நினைக்க வேண்டாம்.
சுக்ரீவனுக்குப் பின்னே வலிமையான சக்தி ஒன்று இருக்கிறது.
அதனால் தான் போருக்கு உம்மை அழைக்கிறார் என்கிறாள்.

நாட்டின் அன்றாட நடப்புகளை தன் விரல் நுனியில் வைத்திருந்தாள்.
தன் அரசியல் கணிப்புத் திறமையால் ரிஷ்யமுக மலையில் இராம,இலக்குவர்கள் வருகையை புரிந்து வைத்திருந்தாள்.

அது மட்டுமல்லாமல் தசரத புத்திரர்கள் பற்றிய முழு செய்திகளையும் தம் யூகத்தால் சேகரித்து விட்டாள். மேலும்
அவர்கள் உம்முடைய உயிரை கொள்வதற்கு (கொல்லுவதற்கு) வந்துள்ளார்கள் என்பதனையும் அன்புடையவர்கள் கூற அறிந்தேன் என்கிறாள்.

*இன்னுயிர் நட்பமைந்து இராமன்* *என்பவன்,உன்னுயிர் கோடலுக்கு உடன் வந்தான் எனத்*
*துன்னிய அன்பினர் சொல்லினார் என்றாள்* 

தாரையின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டான் வாலி.
  
       அடுத்த காட்சி

போரில் வீழ்ந்து கிடக்கிறான் வாலி.
சற்று நேரத்தில் மரணத்தை தழுவிவிடலாம்.

தலை தெறிக்க,தலை விரிகோலமாய்  ஓடி வந்து வாலியின் மார்பில் விழுந்து புலம்புகிறாள்;கதறுகிறாள்;துடிக்கிறாள் தாரை.

நின் தோளில் நித்தம் தங்குவேன்.ஆதலால் இது வரை துன்பத்தை கண்டதில்லை;
நான் புலம்புகிறேன்! என் புலம்பலைப் பார்த்து நீர் ஏதும் சொல்லவில்லையே; என் குற்றம் யாது தலைவனே!

என் உயிர் உன் உயிர் என எப்பொழுதும் சொல்லி வந்தாயே! அது பொய்யோ!
உன் உயிர் இன்று துன்பம் அடைய எங்கு சென்றாயோ! என்ற தாரையின் புலம்பல்கள் நம் நெஞ்சை நெகிழ்வித்து கரைத்துவிடுகின்றன.

        அடுத்த காட்சி

சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் மன்னன் ஆகி விட்டான்.மது அருந்தி தன்னை மறந்தான்:ராமனுக்கு கொடுத்த வாக்குறுதியையும் மறந்தான்.
காலம் கடந்தது.

இராமன் தன் இளவல் இலட்சுமணனைப் பார்த்து சுக்ரீவனிடம் சென்று  அவன் கொடுத்த வாக்குறுதியை நினைவூட்டி வா என்று அனுப்புகிறான்.

இலட்சுமணனோ கோபக் கனலாகி கொதித்து சீறிட்டு வருகிறான்.
அவனை சாந்தப்படுத்த வழி தெரியாமல் அனுமனும்,அங்கதனும் தவிக்கின்றனர்

பின்னர் தாரையிடம் சென்று, தாயே! இந் நெருக்கடியை தாங்கள்தான் தீர்த்து அருள வேண்டும் என முறையிடுகின்றனர்.

தாரையோ தனக்கு *இழைக்கப் பட்ட தீமையை* சகித்துக்கொண்டு
இலக்குவனை அமைதி படுத்த முனைகின்றாள்.

இலக்குவரே! சினம் தணிக! சிறியோர் செய்யும் தீவினையை அறிவிற் சிறந்த தாங்கள் அல்லவா பொறுத்தருள வேண்டும்.

சுக்ரீவன் மது மயக்கத்தில் திளைத்திருப்பதை *மறைத்து* அவன் வானரச் சேனைகளை ஒன்று திரட்டுவதற்கு அனைத்து இடங்களுக்கும் தூது அனுப்பியிருக்கிறான்.
அவர்களின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் எனக் கூறுகிறாள்.மேலும்

அண்ணனை அழித்து தமக்கு  அரச பதவியை அளித்த செயலை மறப்பாரா!
உங்களுக்கு செய்ய வேண்டிய பதில் உதவியை எம் மைத்துனர் ஒருபோதும் மறக்க மாட்டார் எனவும் கூறுகிறாள்.

ஆகவே தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம்.விரைவில் படைகளை ஒன்றிணைத்து அனுப்புகிறோம் என்கிறாள்.

தாரையின் உரை பெண்மையின் மேன்மையை பறைசாற்றி விடுகிறது.

மன்னனுக்கு வரும் முன் சொல்லும் மதியூகியாக விளங்குகிறாள்.

வாலியின்  இன் உயிர்த் துணைவியாக இருந்தும் அவனது அரசாட்சிக்கு துணையாக இருந்தும்  நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறாள்.

தம் துன்பத்தை மறைத்து சுக்ரீவன் சார்பாக இலக்குவனிடம் பேசும் போது தியாகச் சுடராய் ஒளிர் விடுகிறாள்.

பெண்மை போற்றிய கம்பனோடு நாமும் இணைந்து மகிழ்வோம்!!

*கம்பர் புகழ் வாழ்க*

கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன். ✍

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏      19 -12- 19

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

இவ் வார கவிமலரில் இராவணனின் இளைய மகனாகிய அட்ச குமரனின் பாத்திரப்படைப்பை படித்து மகிழ்வோம்.

இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த இளைய மகன்.

இளைய மகனாக இருந்தாலும் இந்திர ஜித்துக்கு இணையாக தோற்றத்திலும்,வீரத்திலும் சிறந்து விளங்கியவன்.

ராவணனின் பிள்ளைகள் தந்தை செய்த தவறுக்காக போர்க்களத்தில் தம் உயிரை விட்டவர்கள்.

தந்தையின் புகழைக் காப்பாற்றவும்,தம் குல மானத்தைக் காப்பாற்றவும் வீர மரணம் அடைந்த கடமை வீரர்கள்.
அம் முறையில் தான் அட்ச குமரனையும் பகிர்ந்துகொள்கிறோம்

அட்ச குமரன் திருமணம் ஆனவனாகத் தெரியவில்லை.
மனைவியோ,பிள்ளைகளோ இருப்பதாக கம்பனில் குறிப்பு இல்லை.

இராவணன் தம் வாழ்நாட்களில் இரு பெரும் போர்களை சந்தித்துள்ளான். முதல் போர்
திசைதோறும் சென்று இந்திரன் உள்ளிட்ட தேவர்களை வென்று பெருமையுடன் விளங்கிய பெரும்போர்.

அப்போரில் இராவணனுக்கு துணையாக அரக்கர் குல வீரர்கள் பலர் போர் புரிந்து புகழ்பெற்றார்கள்.
ஆனால் அட்ச குமரன் அப்போரில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

அட்ச குமரன் தன் தந்தையின் மீது அளவு கடந்த பாசமும்,விநயம் உடையவனாகவும் இருந்தவன்.

            காட்சி

அநுமன் அசோகவனத்தில் உள்ள சீதையைக் கண்டு பிறகு ராவணனின் கருத்தை அறிவோம் என எண்ணி இலங்கை நகருக்குள் புகுகிறான்
இலங்கையில் உள்ள சோலைகளை அழிக்கிறான்.

இதனை அறிந்த ராவணன் மிகுந்த சீற்றம் கொண்டு தம் படைத்ததலைவர் ஐவரை அனுப்ப,அவர்களையும் அழித்து ஒழித்தான் அநுமன்.

இதனை அறிந்த ராவணன் தன் தோள்களை குலுக்கிக் கொண்டு தாமே சென்று அநுமனைப் பிடித்து வருவதாக கூறி எழுந்தான்.

அட்ச குமரன் தந்தையைத் தடுத்து தன்னை அனுப்புமாறு வேண்டுகிறான்.

அரசே! நீ சிவபெருமான் வாகனமாகிய காளையுடன் போரிடலாம்; திருமாலின் வாகனமாகிய கருடனோடு போர் புரியலாம்;அல்லது அவன் படுத்துறங்கும் ஆதி சேடனாகிய பாம்போடு போரிடலாம். அச் செயல்கள் எல்லாம் கூட உனக்கு குறை ஆகாது.
அற்பக் குரங்கோடு நீங்கள் போர் புரிந்து உங்கள் பெருமைக்கு குறை தேடிக் கொள்ளலாமா!
*முக்கணான் ஊர்தி அன்றேல் மூன்று உலகு அடியின் தாயோன்* *ஒக்க ஊர் பறவை அன்றேல் அவன் துயில் உரகம் அன்றேல்* *திக்கயம் அல்லதேல் புன் குரங்கின் மேல் சேறி போலாம்!* *இக்கடன் அடியேற்கு ஈதி;இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய்!* 

 *திறன் அறிந்து சொல்லுக சொல்லை* என்ற வாக்கிற்கேற்ப  ஒருவன் பேசக் கூடிய சொற்கள்தான் அவன் எப்படிப்பட்டவன் என்பதை விளக்கி நிற்கும். 

அட்ச குமரனின் பேச்சில் வெற்று ஆரவாரம் இல்லை;ஆணவமும் தற்பெருமையும் இல்லை, கண்ணியமும்,தந்தையின் மேலுள்ள கனிவுமே விளங்குகிறது.
இந்த வேலையை என்னிடம் கொடுத்துவிட்டு கவலை இல்லாமல் நீங்கள் இருங்கள்! மேலும் இந்திரனோடு நடந்த போருக்கு என்னை அனுப்புவீர்கள் என்று இருந்தேன்.
அந்த மனக்குறை இன்றும் எனக்கு உண்டு. அந்த என் மனக் குறையை போக்கிக் கொள்ள அருமையான வாய்ப்பு ஒன்று எனக்கு வந்துள்ளது.

சிவனோ,திருமாலோ,பிரமனோ குரங்கு வடிவம் கொண்டு வந்திருந்தாலும் அழித்துவிட்டு வருகிறேன்.

குரங்கைத் தப்பிக்க விட்டுவிட்டால் எனக்கு தாங்கள் எந்த தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூற வேறுவழியின்றி ராவணனும் அட்சகுமரனின் வேண்டுகோளை ஏற்றான்.

அட்ச குமரனுக்கும்,அநுமனுக்கும் கடும்போர் நடைபெறுகிறது.

இருவரிடையேயும் விற்போர்,வாள் போர் முழுவீச்சில் நடைபெறுகிறது.
அட்ச குமரன் தன் உடைவாளை எடுத்து அநுமனின் தோளில் குத்தினான்.
தம் கரத்தில் உள்ள ஆயுதங்கள் முழுவதும் நீங்கிய நிலையில் அநுமனைக் கட்டிப்பிடிக்க முயன்றான். அதற்குள் அநுமன் தம் நீண்ட நெடிய வாலால் அட்ச குமரனைக் கட்டிவிட்டான்.

போரின் நிறைவில் அட்சகுமரன் வீரமரணம் அடைந்துவிட்டான். 

அக்ஷய குமரன் என்ற வட சொல்லுக்கு அழிவில்லாதவன் என்று பொருள்.அழிவில்லாத என்ற பொருள் உள்ள இப் பிள்ளை தான் தந்தையின் பொருட்டு முதலில் அழிந்த பிள்ளை என நினைக்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.

தந்தைக்கு பின்னால் இறப்பது தான் உலக இயற்கை.
ஆனால் தான் செய்யாத தவறுக்காக தந்தைக்கு முன்னமேயே உயிரைக்கொடுத்து மறைந்தான்.
இம் மரணம் தான் கற்போர் நெஞ்சில் துயரத்தை உறையவைக்கிறது.

ராம,ராவணப்போரில் ராவணன் என்ற வேர் மடிந்தே ஆக வேண்டும்.ஆனால் அட்ச குமரன் போன்ற விழுதுகள் சாய்ந்ததை தான் உள்ளம் ஏற்க தயங்குகிறது.

*கம்பர் புகழ் வாழ்க*

கவிமலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன்.✍ .

ஸ்ரீ அனுமத் ஜெயந்தி

🙏🙏 *ராம ராம* 🙏🙏

ஸ்ரீ ஆஞ்ஜநேயர் திருவடிகளே சரணம்!

ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தின் நிறைவில் அநுமன் தம் வானரப் படைகளுடன் சீதாப் பிராட்டியை தேடி வந்துகொண்டிருக்கும்போது ஜடாயுவின் சகோதரனாகிய சம்பாதி (கழுகு) தனக்கு இறக்கைகள் இல்லாமையால் மலை ஒன்று நடந்து வருவது போல வந்து அநுமனைக் கண்டான்.

தன் தம்பி ஜடாயு உயிர் நீங்கிய விபரம் யாது என கேட்க அநுமன் முழு நிகழ்வினையும் சொல்லி முடிக்க

சம்பாதியும் தன் தம்பி ஜடாயு  ராம சேவைக்காக உயிர் நீங்கியது அவனுக்குப் பெரும் புண்ணியமே எனக் கூறி ஜடாயுவுக்காக ஆற்ற வேண்டிய இறுதிக் கடன்களை செய்து முடித்தான். அதனால் முழு மனநிறைவும் அடைந்தான்.

பிறகு அநுமன் முதலியோரை வணங்கி, 'நீங்கள் என்னை வாழ்வித்தீர்கள்; இப்போது நீங்கள் யாவரும் *ராம ராம* என உச்சரியுங்கள் எனக்கு ஓர் சிறந்த பயன் கிடைக்கும் எனச் சொல்லுகிறான்.
*எல்லீரும் அவ் இராம நாமமே சொல்லீர் ;* * **சொல்ல* *எனக்கு ஓர் சோர்விலா நல் ஈரப் பயன் நண்ணும்*                 
என்பது கம்பன் பாடல்.

அப்போது அநுமன்,அங்கதன்,ஜாம்பவான் மற்றும் வானரக் கூட்டங்கள் ராம் ராம் என உரத்த குரலில் உச்சரிக்கவும் சம்பாதியின் இறகுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதைக் கண்டார்கள்; வியப்படைந்தார்கள் ; மேலும் மேலும் பக்திப் பரவசத்தோடு முழங்க,முழங்க சம்பாதியின் இறகுகள் முழு வளர்ச்சி அடைந்தன.
சம்பாதியும் மிக மகிழ்ந்து நன்றி சொல்லி எல்லோரையும் வணங்கி ராம் ராம் எனக் கூறிக் கொண்டே தம் இருப்பிடம் நோக்கி நகர்ந்தான்.

மேற்கண்ட செயல் நிகழ்ந்த விநாடிவரை இராமனுக்கு தொண்டு செய்வதையே அநுமனின் குறிக்கோளாக இருந்தது.அவனை விட பெரியதும் உயர்ந்ததும் ஒன்றும் இல்லை எனவும் நம்பியிருந்தான்.

சம்பாதிக்கு அற்புதம் நிகழ்ந்த மறுகணமே அநுமனின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

சம்பாதிக்கு அற்புதம் நடந்த நேரத்தில் ஸ்ரீ ராமன் அந்த இடத்தில் இல்லை.பல காத தூரம் தள்ளி கிஷ்கிந்தையில் உள்ளான்.
ஆனால் அவனது திருப்பெயரை (நாமத்தை) பலரும் உள்ளன்புடனும்,பக்தியுடனும் கூறியபோது அரிய செயல் நடந்துவிட்டதை எண்ணி,எண்ணி பக்தி வெள்ளத்தில் அநுமன் திளைத்தான்.மெய் சிலிர்த்தான்!

இராமனை விட அவனது திருநாமம் மிக உயர்ந்தது என்பதை கண்கூடாக தெளிந்துவிட்டான்.

இனி கடலைத் தாண்டவும்,அரக்கர் கோட்டையுள் புகவும்,சீதாப் பிராட்டியாரைத் தரிசித்து மீளவும் *ராம நாமமே அருமருந்து* என அறிந்துவிடுகிறான்.  பிறகு       

ஜாம்பவான் அநுமனின் சக்தியை கூறிய அளவில் தன் வலிமை பெருகியதை அறிந்து மகிழ்ந்து *ராம் ராம்* எனக் கூறிக்கொண்டே *விஸ்வ ரூபம்* எடுத்தார்.

நாமும் இத் திருநாளில் ராம் ராம் என ஜெபித்திடுவோம்!
நல் வளமும்,நலனும் பெற்று உய்ந்திடுவோம்!

        🙏 *ஜெய் ஸ்ரீ ராம்* 🙏.