🙏 *கம்பர் கவி மலர்* 🙏
ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !
வாலிக்கும்,சுக்ரீவனுக்கும் மற்போர் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது.ஒரு கட்டத்தில் சுக்ரீவனை வாலி மிக தீவிரமாக தாக்கினான்.
சுக்ரிவன் என்ன செய்வதென்று தெரியாமல் தீனமாக ராமனை நோக்கினான்.
அந்த நேரத்தில் ராமன் தமது கோதண்டத்தில் அம்பினைத் தொடுத்து வாலியின் மார்பில் விட்டான். அக் கணத்தில்
வாலி தனது கைகளில் பற்றியிருந்த சுக்ரீவனை நழுவவிட்டான். தன்
மார்பில் பாய்ந்த அம்பினை இறுகப் பிடித்துக்கொண்டான்.
கலங்கி,களத்தில் சாய்ந்தான் வாலி.
நமக்குத் தெரியாமல் இந்த அம்பினை எய்தவன் யாராக இருக்கக் கூடும் என யோசனையில் ஆழ்கிறான்
அம்பினை ஆவேசத்தில் முறித்தெறிய முயலுகிறான்.
முறிக்க முடியவில்லை.
அம்பின் அடிப்புறத்தைப் பார்க்கிறான்.
ஆடிப்போய் விடுகிறான்..அவன் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறான். ஆம்.
முற்றிலும் எதிர்பாராத ஏற்பட்ட நிகழ்வு .அம்பில்
ராமன் என்னும் பெயர் பொறித்திருப்பதை கண்டான்.
கவியரசர் கூறுவதைப் பார்ப்போம்.
*மும்மைசால் உலகுக்(கு) எல்லாம் மூல மந்திரத்தை முற்றும்* *தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே* *இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை ராமன் என்னும்* *செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்.*
(பிறகு வாலியின் கேள்விகள் -இராமனின் உரைகள் பல பாடல்களில் வருகின்றன.இதனை பிறகு பார்ப்போம்.)
இராமன் என்னும் நாமம் தன்னை கண்களால் தெரிந்து கண்டான் என்று சொல்லாமல் கண்களில் தெரியக் கண்டான் என்று கம்பன் சொல்வதற்கு நுட்பமான பொருள் உண்டு.
தெரிந்து கண்டான் என்பது முயற்சி செய்து தேடிக் காணுதல்.
தெரியக் கண்டான் என்பது முயற்சி எதுவும் இல்லாமல் பரம்பொருளே தன்னை நாடி வந்து (அருளுவது)காண்பது.
ஆதி நாயகனாம் இராமனை அறிந்து கொள்ள வாலி முயலவில்லை.
தன் பெயர் பொறிக்கப்பட்ட அம்பை ராமன் அனுப்பி தன்னைக்காட்ட
வாலி கண்டான்.
மேலிருந்து கீழே இறங்கி கீழே இருந்த வாலியை மேலே(பரம பதத்திற்கு) அழைத்து செல்ல முயல்வதை சொல்லும் சொல்தான் தெரியக் கண்டான்.
கண்களில் தெரியக் கண்டான் என்ற கவிச் சக்கரவர்த்தியின் பொருள் ஆழம் மிக்க வரிகள் நினைத்து மகிழத் தக்கது.
*சிறியன சிந்தியாதான்* ஆகிய வாலிக்கு மோட்சம் அருளுவது தான் ஸ்ரீ ராமபிரானின் குறிக்கோள்.
வாலி வதைப் படலம் என்பதை வாலி மோட்சப் படலம் என்றாலும் பொருத்தமே.
*கம்பர் புகழ் வாழ்க!*
கம்பர் கவி மலரின் மணம் தொடரும்.
தே.இரா.வீரராகவன். ✍
23-01-2020
No comments:
Post a Comment