Tuesday, January 14, 2020

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏
ஸ்ரீ  ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!!

போர்க்களத்தில் ஸ்ரீ ராமச்சந்திரனுடன் விபீஷணனும் நிற்கிறான்.
களத்தில் வீரத்துடன் எதிரே நிற்பவனைப் பார்த்த ராமன் விபீஷணா! இவன் யார் எனக் கேட்கிறான்.

இவர் நீதிகள் முழுதும் அறிந்த கும்பகர்ணன்.எனக்கு மூத்தவர்.  ராவணனுக்கு இளையவர்.தன் தமையனுக்கு புத்திமதிகள் பல கூறியும் அவர் கேட்காமையால் தமையனுக்காக போர் புரிய வந்துள்ளார்.

இதனைக் கேட்ட ராமனும் கொடியவனுக்காக உன் தமையன் கும்பகர்ணன் ஏன் உயிரை விட வேண்டும்.அவரை இங்கே அழைத்து வருக எனச் சொல்கிறான்.

இதனைக் கேட்ட விபீஷணனும் மகிழ்ச்சியுடன் கும்பகர்ணனிடம் சென்று வணங்கினான்.

கும்பகர்ணன், இராமனுடன் இருக்க மனமில்லாது நம்மிடமே வந்துவிட்டான் விபீஷணன் என நினைத்து
அவனை மார்புடன் இறுகத் தழுவிக்கொண்டு தம்பி!, "நீ ராகவனிடம் சரண் அடைந்துவிட்டாய்!இம்மையிலும்,மறுமையிலும் நன்மை பெற்றுவிட்டாய் என்றல்லவோ நினைத்தேன். அப்படி இருக்க காலன் வாயில் நுழைய இருக்கும் என்னை நோக்கி ஏன் வந்தாய்?
             மேலும்

நாங்கள் மடிந்த பிறகு நீ இருந்தால்தானே எங்களுக்கு எள்ளும்,நீரும் இறைத்து பிதுர்க் கடனை ஆற்ற முடியும்.

ஆகவே நீ ராமன் பக்கம் சென்றுவிடு என கும்பகர்ணன் மன்றாடுகிறான்.

இதனைக் கேட்ட விபீஷணன், அண்ணா!  நான் இராமனைப் பிரிந்து வந்துவிடவில்லை.
நீங்கள் ஞானத்தில் சிறந்தவராகவும்,நீதியில் வல்லவராகவும் இருப்பதால் உம்முடைய மரணத்தை தடுத்து, ஸ்ரீ ராமனின் பக்கம் சேர்த்து அழியா பேரின்பம் பெற அவனுடன் சேர்த்து விடலாம் என வந்தேன்.

தாங்கள் சம்மதித்தால் என்னைக் காப்பது போலவே தங்களையும் காத்து அருளுவார்.
அவரால் எனக்களிக்கப் பட்ட இலங்கை அரசை நான் உம்முடைய திருவடிகளில் அளித்துவிட்டு, ஏவல் செய்ய காத்து இருக்கிறேன் என சொல்லுகிறான்.

இதனைக் கேட்ட கும்பகர்ணன், பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே 
என் கண்ணின் மணியே! விபீஷணா!

என்னை நீண்டகாலம் எத் துன்பத்தையும் கொடுக்காமல் சுகமாக வளர்த்தான் ராவணன்.
அவனே தன் கையாலேயே நெற்றிக்குத் திலகமிட்டு போர்க்கோலம் அணிவித்து போருக்குச் சென்று வா என அனுப்பி இருக்கிறான்.

அந்த அண்ணனுக்காக போருக்குச் செல்வேனா! அதை விட்டு *நீர்க்கோல வாழ்வை நச்சி*(நீரால் வரையப்பட்ட கோலத்தைப் போன்ற நிலையில்லாத வாழ்வை விரும்பி) எதிர் அணியில் சேருவேனா!

இதுவரை உயிருக்கும், உடலுக்கும் உரமூட்டிய அவனுக்காக செஞ்சோற்றுக் கடனை தீர்ப்பது தானே நீதி! நியதியும் கூட

நீரில் எழுதப்பட்ட அல்லது நீரால் எழுதப்பட்ட கோலம் போன்ற நிலையில்லாத செல்வ வாழ்வை விரும்பி தமையனுக்கு உயிரைக் கொடுப்பதில் இருந்து  பின்வாங்க மாட்டேன் என்று கும்பன் கூறுவது ஞானத்தால் பக்குவப்பட்டவன் அவன் என்பது தெளிவாக விளங்குகிறது.அது மட்டுமில்லாமல் தியாகத்தின் திருவுருவாய் காட்சியளித்து படிப்போரை கலங்க அடித்து விடுகிறான்.

தம்பீ, என் துன்பத்தைக் களைய வேண்டும் என நீ நினைத்தால் கார்முகில் வண்ணனாகிய இராமனை விரைவில் சென்று அடைவாய் என உரைக்கிறான்.

*நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்* 
*போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர்க்கொடாது அங்குப் போகேன்*
*தார்க் கோல மேனி மைந்த: என் துயர் தவிர்தியாகில்*
*கார்க்கோல மேனியானைக் கூடுதி கடிதின் என்றான்"*

விபீஷணனுக்கும்,கும்பகர்ணனுக்கும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கம்பன் ஆளும் நீர்க்கோல வாழ்வை விரும்பி என்னும் தொடர் மூலம் நம்  உள்ளத்தை  கொள்ளை கொண்டு விடுகிறான்.

நீ இராமனைத் தான் சென்று அடைய வேண்டும் என்ற கும்பனின் உறுதி சகோதர பாசத்தின் உச்சத்தையே தொட்டுவிடுகிறது.நம் நெஞ்சையும் நெகிழ வைத்து விடுகிறது.

*கம்பன் புகழ் வாழ்க*

   கம்பன் கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன் ✍
16 - 01- 2020

Wednesday, December 4, 2019

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்*🙏  5 - 12- 19

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!

இவ் வார கவி மலரில் அதிகம் கவனிக்கப்படாத -பரிதாபத்திற்குரிய *மண்டோதரி* என்னும் பாத்திரப்படைப்பினை பகிர்ந்து மகிழ்வோம்.

மண்டோதரி ராவணனின் மனைவி.
மயன் என்னும் தேவதச்சனின் திருமகள்.

அழகும்,ஒழுக்கமும் ஒருங்கே இணைந்த அற்புத பாத்திரப் படைப்பு.

மண்டோதரி என்னும் சொல்லுக்கு மென்மையான வயிறை உடையவள் என்று பொருள்.
அவள் உள்ளமும் அரக்கர் குலத்திற்கு மாறான மென்மை உடையது.
தன் ஒத்த சீதைக்கு தன் கணவன் ராவணன் செய்த தீங்கை எண்ணி,எண்ணி கண்ணீர் வடித்தாள்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீதையை ராமனிடமே விட்டு வாருங்கள் எனக் கதறி மன்றாடினாள்.

எத்தனை முறை எடுத்துச் சொன்னாள்!
தாடகையை,சுபாகுவை,கர தூஷணர்களை கொன்று அழித்தவன் மாவீரன் ராமனே!
அது மட்டுமா 
வலிமை நிறைந்த வாலியையும் கொன்றவன் அல்லவா என்றெல்லாம் எடுத்து இயம்புகிறாள்.

         ஒரு காட்சி

ராவணன் மலையே கீழே விழுந்தது போல மாண்டு கிடக்கிறான்.
புலம்புகிறாள் மண்டோதரி.
எம் நாதனே!
நேற்று கூட ராமனை புகழ்ந்தீர்களே!
"இன்று போய் நாளை வா" என்ற ஸ்ரீ ராமனின் பெருங்குணத்தை உருகி,உருகி உரைத்தீரே!
அதன் பிறகு கூட சீதையை அவரிடம் ஒப்படைத்து இருந்தால் இந்த நிலை உமக்கு நேர்ந்திருக்காதே!

மண்டோதரியின் கதறல் படிப்போரின் மனதை கரைத்து விடுகிறது.

நீ செல்வதற்கு முன் நான் செல்ல வேண்டும் என நினைத்தேனே! தப்பாகிப் போய்விட்டதே
அதனால் தான் உம் தலைகள் வீழ்ந்துபட்டனவோ என்னென்று சொல்வேன்!

மேலும் என் கணவன் கயிலையையே தூக்கியவன்.
அம் மாவீரனின் அழகிய உடலில் எள் இருக்கும் இடம் கூட இல்லாமல் ராமனின் அம்புகள் துளைத்தனவே!
அதற்குக் காரணம் இப்படி இருக்குமோ.

தன் கணவனின் உயிரைக் கவர்ந்த அம்பினைக் காண வேண்டும் என்பது மண்டோதரியின் விருப்பம்.

தம் மணாளனைக் கொல்ல அம்பு ஒன்று உலகிலேயே இல்லை என்றே நினைத்திருந்தாள்.
சுற்றும் முற்றும் அம்பைத் தேடிப் பார்க்கிறாள்.காணவில்லை.
அம்பு காணாமைக்கு காரணம் தேடிக் கண்டுபிடிக்கிறாள்.

அன்று சூர்ப்பணகையின் வருணனையால் தம் அகச் சிறையில்(இதயத்தில்) சீதையை வைத்து விட்டான் ராவணன்.

இன்று இராமன் விட்ட அம்பு  அசோகவனத்தில்  புறச்சிறையில் இருந்த சீதையை மீட்டுவிட்டது.

புறச்சிறையில் இருந்து மீட்ட ஜானகியை ராவணனின் அகச்(இதயம்)சிறையில் இருந்தும் மீட்க வேண்டும் என்பதற்காக உடலின் உள்ளேயே அம்பு  தங்கிவிட்டதோ என்று புலம்புகிறாள்.மேலும் ராவணனின் 
 காதலை அவன் உள்ளேதேடி தேடி
தடவுகிறதாம் அம்பு.

கவியரசரின் கவி நயம் நம்மை பெருமிதம் கொள்ளச்செய்கிறது.

*"வெள்ளெருக்கஞ் சடை முடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்* *எள் இருக்கும் இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ?*
*கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்* *உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி.* 

சீதாப் பிராட்டிக்கு நிகராக எண்ணற்ற நற் குணங்கள் பெற்றிருந்தாலும் கணவனின் தீய குணத்தால் மண்டோதரியின் பெருமை பேசப் படாமலேயே போய்விட்டது.

நற்குணவதியாக விளங்கினாலும் காலங்காலமாக வாழ்ந்து மறைந்த மங்கையர்களின் ஒட்டுமொத்த துயரமாகத் தான் மண்டோதரியைப் பார்க்க முடிகிறது.

*கம்பர் புகழ் வாழ்க!*

கவி மலரின் மணம் தொடரும்!

தே.இரா.வீரராகவன் ✍

Tuesday, November 26, 2019

கம்பர் கவி மலர்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏         28-11-19



ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்!!

இவ் வார கவிமலரில் திரிசடை என்ற பாத்திரப்படைப்பின் சிறப்பை  படித்து மகிழ்வோம்.

சுந்தர காண்டத்தின் காட்சிப்படலத்தில் திரிசடை கம்பனால் அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

அரக்கர் குலத்தில் அவதரித்த அறச்செம்மல்!
சேற்றில் விளைந்த செந்தாமரை!  ஆம்
           விபீஷணன்

விபீஷணனின் திருமகள்தான் திரிசடை.

முழுமையாக அறியப்படாதவள் ஆகவும்,முக்கியப் பாத்திரமாகவும் விளங்கி சிறப்பு சேர்க்கிறாள்.

அன்னை ஜானகியால் தாயே என்றும்,உற்ற தோழி என்றும் விளிக்கப்பட்டவள் திரிசடை.

சீதா தனது மாமியர்களையோ,வேறு யாரையுமே தாய் என அழைக்காமல் இவளை மட்டும் தாய் என அழைத்த பெருமைக்கு உரியவள்.
அதனால்தான் கவியரசரும் *ஆயிடை திரிசடை என்னும் அன்பினால் தாயினும் இனியவள் தன்னை நோக்கினாள்.* என்கிறார்

சீதாப் பிராட்டி அசோகவனத்தில் கணவனை காண முடியாத சோகத்தில் இருக்கும்பொழுது சுகமான தேறுதல் வார்த்தைகளை அவ்வப்போது சொல்லக்கூடிய தாயாகவும், தோழியாகவும் விளங்குகிறாள்.

முன்னொரு காலத்தில் விசுவாமித்ரரும்,எனது தலைவரும்,இளையவரும் மிதிலை வந்த நேரத்தில் எனது இடக்கண் துடித்தது.பிறகு பூமி முழுவதையும் இழந்து தம்பியுடன் காடு புக நேர்ந்த போது வலக்கண் துடித்தது என்கிறாள்.

தற்காலத்தில் நடந்த நிமித்தங்களை மட்டும் கூறாமல் கடந்த காலத்தில் நடந்த நிமித்தங்களையும் குழந்தைபோல் சீதா திரிசடையுடன் பகிர்ந்தாள் என்னும்போது தோழமையின் நெருக்கம் புரிகிறது.

பெண்களுக்கு இடக்கண் துடிப்பதும்,ஆண்களுக்கு வலம் துடிப்பதும் நன்மைக்கான அறிகுறிகள்.

ஒரு சமயம் திரிசடை தான் இரவு கண்ட கனவைப் பற்றி சீதாதேவியிடம் சொல்கிறாள்.

அழகிய திருமகளே! தீட்சண்யமான உன் முகத்தில் பிரகாசமான ஒளி ஒன்று தெரிகிறது.

உன் காதுகளில்  பொன்வண்டு ஒன்று ஊதிச் செல்லுகிறது.

ஆகையால் இனிய நற்செய்தி ஒன்றை விரைவில் கேட்கப்போகிறாய்!
*செவியில்,மெல்லென,பொன் நிறத் தும்பி வந்து,ஊதிப்போயதால் என்பது கம்பன் வரிகள்.

திரிசடை இன்னும் சொல்கிறாள்.
சீதா, நீ நேற்று இரவு உறங்கவே இல்லை.ஆனால் நான் உறங்கினேன்.
உறக்கத்தில் நான் கனவில் கண்டதைச் சொல்லுகிறேன்.கேள்!

ராவணன் தன் உடல் முழுவதையும் எண்ணெய் பூசிக்கொண்டும்,சிவந்த ஆடை அணிந்து கொண்டும் கழுதையும்,பேயும் ஓட்டிக்கொண்டு செல்கிற தேரில் ஏறி சுற்றம் சூழ தென்திசைக்குச் சென்றான். அவள் மனைவி மண்டோதரியின் கூந்தலோ தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
     
       மேலும் கேள்!

அடர்ந்த ஓர் காடு.
அக் காடு முழுவதும் யானைகளின் கூட்டம். அந்த இடத்திற்கு இரு சிங்கங்கள் தலைமையில் ஒரு புலிக் கூட்டமே வந்தது.
அக் கூட்டங்கள் யானைக் கூட்டங்களை அழித்து ஒழித்தது.
யானைகளிடம் இருந்த *அழகிய மயில் ஒன்று புறப்பட்டு சிங்கங்களிடம் போய்ச் சேர்ந்தது என்றாள்.
          மேலும்
    ஆயிரம் விளக்கொளியின் பிரகாசத்தை உடைய ஓர் விளக்கை ஏந்திக்கொண்டு திருமகள் என் பெரியப்பாவின் வீட்டில் இருந்து என் தந்தையின் இல்லத்திற்கு வருவதையும் கனவில் கண்டேன் என்றும் உரைக்கிறாள்.

இலங்கையின் அரசப்பதவி தன் தந்தையை நோக்கி வர இருக்கிறது என்பதையும் கனவின் பயனாக சொல்லாமல் சொல்கிறாள் திரிசடை.

சுந்தர காண்டத்தில் திரிசடை பற்றிய செய்தி இத்துடன் நிறைவடைகிறது.
யுத்த காண்டத்திலும் தொடர்கிறது. 

சீதாப் பிராட்டியார் மனத் தளர்ச்சி அடைந்த நேரங்களில் சோர்வுகளை நீக்கி,மனத் தெம்பினை ஊட்டி உயிர் வளர்த்த அருமையான பாத்திரப் படைப்பு தான் *திரிசடை.

நம் கம்பன் கவிதைகளில் மட்டும் வல்லவன் இல்லை: கனவுப் பலன்களை கணிப்பதிலும் வல்லவனாக, பல கலைகளிலும் தேர்ந்தவனாக இருப்பதைக் கண்டு பெருமை கொள்கிறோம்.

கம்பர் புகழ் வாழ்க!

கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன். 


Tuesday, November 19, 2019

கம்பர் கவி மலர்

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!               

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

இவ் வார கம்பர் கவி மலரில் சூர்ப்பணகை என்ற பாத்திர படைப்பையும், சூர்ப்பணகை மூலமாக கம்பர் அளிக்கும் நகைைச்சுவை விருந்தையும் பருகி மகிழ்வோம்.

இராமாயணக் காப்பியத்தின் முதல் திருப்புமுனையாக கைகேயி என்ற பெண் விளங்குகிறாள்.

காப்பியத்தின் இரண்டாம் திருப்புமுனையாக சூர்ப்பணகை என்ற பெண் விளங்குகிறாள்.

சூர்ப்பணகை என்பவள் அரக்கி; ராவணனுடைய தங்கை என்ற அளவில்தான் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கிறோம்.
இராமாயணத்தில் அதிகம் அறியப்படாத பாத்திரங்களுள் சூர்ப்பணகையும் ஒருத்தி.

சூர்ப்பணகை அவள் தன் தாய் கேசி, பாட்டி ஆகியோர்களை விடவும் அழகில் விஞ்சி இருந்தாள்.

தன் தங்கையை சிறந்த வீரனுக்கு மணமுடிக்க எண்ணி கால்கை நாட்டின் மிகச் சிறந்த அசுரக் கூட்டத்தின் படைத்தலைவனாக இருக்கக்கூடிய வித்யுத்ஜின்னுக்கு மணம் செய்வித்து மகிழ்ந்தான் ராவணன்.

இவ்விருவருக்கும் இடையே இல்லறம் இனிதே போய்க்கொண்டிருந்தது.

இராவணனுக்கு ஆணவம் மிகுந்து எல்லா நாடுகளையும் தம் வசமாக்கிக் கொள்ள முனைந்தான்.
அவ்வாறு போரிடும் பொழுது தனது மைத்துனன் நாடு என்றும் பாராமல் கால்கை நாட்டோடும் போரிட்டு,தன் தங்கையின் கணவனையும் சூழ்ச்சியால் வதம் செய்து கொன்றான்.

மணம் முடித்து வைத்த அண்ணனே தன் கணவனை சூதினால் வதம் செய்து விட்டானே என்று பித்துப் பிடித்தவள் போல அரற்றினாள் சூர்ப்பணகை.

என் கணவனை சூதினால் கொன்றதுபோல் தன் அண்ணனையும் சூதினால் கொல்வேன் என கணவனின் சடலம் முன் சபதம் ஏற்றாள்.

ராவணனுடைய வதத்திற்கு மறைமுகமாக தன்னைக் கருவியாக்க முனைந்துவிட்டாள்.

நோய் உடம்பிலேயே தங்கி தான் வெளிவரும் காலத்தை நோக்கி வெளியே வருவது போல ராவணனை மூல நாசம் செய்ய தகுந்த காலம் பார்த்து காத்திருக்கிறாள்.
"நீல மாமணி நிற நிருதர் வேந்தனை,மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள்"
என்கிறார் கவியரசர்.
                    நிற்க,

சூர்ப்பணகையின் சில கூற்றுக்கள்
நகைச்சுவையின் உச்சத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன.

இலட்சுமணன் அரக்கியின் மூக்கு முதலான அவயவங்களை அறுத்து எறிந்து விடுகின்றான். அவள் கதறி அழுகிறாள்.பிறகு சுதாரித்துக் கொண்டு எழுகிறாள்.அவள் பேசும் பேச்சு சிரிக்கத்தெரியாதவர்களைக் கூட சிரிக்க வைத்து விடுகிறது.

இராம,இலட்சுமணர்களைப் பார்த்து நீங்கள் என் உறுப்புகளை அரிந்ததன் நோக்கம் எனக்கு நன்றாகவே புரிகிறது.
இவ்வளவு அழகிய வடிவத்தை உடைய என்னை அயலான் நாடி விடக் கூடாது என்ற கருத்தில் தானே அரிந்தீர்கள்?
தங்களால் இயலாது என்றால் உங்களுடைய தம்பியையாவது மணம் செய்து வையுங்கள் எனக் கூறுகிறாள்.
                    மேலும்

மூக்கு இல்லாதவளோடு நான் எப்படி வாழ்வேன் என்று இலட்சுமணன் கேட்டால் இடையே இல்லாத சீதாவுடன் நான் வாழவில்லையா எனத் திருப்பிக் கேளுங்கள் என்கிறாள்.

"அரிந்த நாசி ஒருங்கிலா இவளொடும் உறைவெனோ?
என்பானேல்,இறைவ! "ஒன்றும் மருங்கு இல்லாதவளோடும் அன்றோ "நீ நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்"
என்ற கம்ப நாடனின் வரிகள் நகைச் சுவையை ஊட்டி இன்புற வைத்து விடுகிறது.

கம்பன் புகழ் வாழ்க!

கவி மலரின் மணம் தொடரும்.

தே.இரா.வீரராகவன். 
21-11-19

Tuesday, November 12, 2019

கம்பர் கவி மலர் 14-11-19

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம்! !

இவ் வார கவி மலரில் உயர்திணை அல்லாத பறவைகளின் உறவின் உயர்நிலையை உணர்ந்து மகிழ்வோம்.

உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத குடும்ப அமைப்பு -குடும்ப உறவுகள் நம் பாரதப் பண்பாட்டின் மையமாக மலர்ந்து காணப்படுகிறது.

இவ்வுறவின் உயர்வுக்கு பண்டைய காப்பியங்கள் ,மற்றும் அவ்வப்போது வாழ்ந்த மஹான்கள்,புலவர்கள் ஆகியோரின் அரும்பணியே காரணம் எனலாம்.

உறவுகள் என்பது உயர்திணை ஆகிய மனிதர்களுக்கே உரியது என நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.இது பொதுவான நியதி.
ஆனால் கம்பன் இப்பொதுவான நியதியை மாற்றி பறவைகள் விலங்குகள் இவற்றிடமும் கூட உறவுமுறை பின்னிப் பிணைவதாக அமைத்து தமது இராமாவதாரத்தில் மெருகேற்றுவதை கண்டு வியக்கிறோம்.

சம்பாதியும்,ஜடாயுவும் கழுகு இனத்தில் உடன்பிறந்த சகோதரர்கள்.

ஒருவருக்கொருவர் தம்நலத்தை விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர்கள்.
ஒரு சமயத்தில் ஜடாயுவும், சம்பாதியும் சூரியனை நோக்கி மேலே பறந்து செல்கிறார்கள்.

சூரியனுடைய வெப்பம் ஜடாயுவை மிகவும் வருத்துகிறது.இதைத் தாங்க முடியாத சம்பாதி வருந்தி
தனது சிறகுகளை குடையாக்கி தம்பியைக் காத்தான்.

இம் முயற்சியில் சூரியனின்வெப்பம் தாங்க முடியாத சம்பாதியின் இறகுகள் கருகி வீழ்ந்தன.
சம்பாதியும் கீழே விழுந்தான்.

தம்பியைக் காப்பாற்ற உயர்ந்த அண்ணனாக -சகோதரத்துவத்தின் உருவகமாக சம்பாதி விளங்குவதை வியந்து மகிழ்கிறோம்.

மற்றோர் இடத்தில் ஜடாயுவின் மீது காட்டும் உன்னதமான சகோதர வாஞ்சை வெளிப்படுகிறது.

சீதையைத் தேடித் தென்கடற்கரையை அடைந்த வானரர்கள் சீதாவை எங்கும் காணாமையால் மனம் தளர்ந்தார்கள்.

அங்கதன்,ஜாம்பவான் முதலியோர் தங்கள் உயிரை விடத் துணிந்தார்கள்.

அப்போது அநுமன் அவர்களைப் பார்த்து வீரவுரை நிகழ்த்துகிறான்.
"நீங்கள் இப்படி மனம் தளரலாமா!
சீதையைத் தேடும் முயற்சியில் ஜடாயுவைப் போல போரிட்டு உயிர் துறப்போமானால் அது தான் பெருமை என்கிறான்.

ஜடாயுவைப் போல உயிர்துறப்போம் என்ற அநுமனின் உரையைக் கேட்ட அளவில் சம்பாதி
இடியினால் சுக்குநூறான மலையைப் போல மனம் கலங்கினான்.
பிறகு மனம் சம நிலை அடைந்தவனாய் அநுமனைப் பார்த்து ஜடாயுவை வீழ்த்தியவன் யார் எனக் கேட்க அநுமன் முழுமையாக எல்லாவற்றையும் கூறுகிறான்.

இதைக்கேட்ட சம்பாதி ஜடாயுவை நினைத்துப் பலவாறு புலம்பி விட்டு தன் உயிரைப் போக்கிக் கொள்ள முற்படுகிறான்.

அநுமன் தடுத்து நிறுத்தி உங்கள் சகோதரன் , இராமருடைய திருப்பணி நிமித்தமாக உயிர்விட்டு மிக உயர்ந்த பரமபதம் அடைந்துவிட்டார்.
அதனால் நீர் வருந்தாதீர்! உமது அரிய உயிரைப் போக்க முனையாதீர் என்று கூறுகிறான்.

சம்பாதியும், என் தம்பி ஜடாயு ஸ்ரீ ராமனுடன் உறவு கொண்டாடி, அவனுக்காக தன் உயிரையே மன நிறைவுடன் விட்டான்.
இப் பேற்றைக்காட்டிலும் சிறந்த இன்பம் எனக்கு வேறொன்றும் இல்லை எனக் கூறுகிறான்.மேலும் ஜடாயுவுக்கான நீர்க் கடன்கள் முதலான இறுதிக் கடன்களை செய்து மன நிறைவு கொள்கிறான்.
இக்கருத்துள்ள கம்பனின் அழகிய பாடலைக் காண்போமா!

அறம் அன்னானுடன் எம்பி அன்பினோடு உறவு உன்னா,
உயிர் ஒன்ற ஓவினான்;
பெற ஒண்ணாது ஓர் பேறு பெற்றவர்க்கு இறவு என் ஆம்?
இதின் இன்பம் யாவதோ?'

ஜடாயு சீதையைக் காக்க முயன்று உயிரை இழந்தான்.
சம்பாதியோ சீதை இலங்கையில் இருப்பதைத் தெரிவித்து வானர வீரர்களின் உயிரைக் காத்து உயர்வடைந்தான்.

ஆனால் கவி அரசர் கம்பரோ மானிடத்தை உயர்த்திட பறவைகளின் பாசப் பிணைப்பைக் காட்டி  என்றும் அழியா நிலைத்த புகழைப் பெற்றார்.

கம்பர் புகழ் வாழ்க!

கவி மலரின் மணம் தொடரும்

தே.இரா.வீரராகவன். 

Thursday, November 7, 2019

தமிழ் இலக்கியம்

🙏 *கம்பர் கவி மலர்* 🙏

ஸ்ரீ ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்!

ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் !!

இவ் வார மலரில் கம்பரின் அழகிய சொல்லோவியம் ஒன்றினை படித்து மகிழ்வோம்.

இராவணனை அழித்து சீதையை சிறை மீட்டு அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறான் இராமன்.
வரக்கூடிய வழியில் பரத்வாஜ முனிவரை கண்டு வணங்கி அவருடைய விருந்தோம்பலை ஏற்று மகிழ்கிறான்.

பரத்வாஜ மாமுனிவரும் இராமனை பலவாறாக புகழ்கிறார். மேலும் இராமா! நீ விரும்பியது எதுவானாலும் உனக்கு வரமாக கொடுத்துவிட்டேன்.இப்பொழுது சொல்! உனக்கு என்ன வேண்டும் என கேட்க ராமனும் குரங்குக் கூட்டங்கள் துன்பமின்றி சென்ற இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என அருள வேண்டும் என்கிறான்.
*கவிக்குலம் கவ்வை இன்றாகி வென்றி பெற்று வாழ்க!* என்பது கம்பனின் வரிகள்.

மேலும் குரங்குகள் செல்லும் இடங்களில் எல்லாம் காயும்,கனிகளும்,செழுந்தேனும் மிக்கு விளங்க தாங்கள் அருளல் வேண்டும் எனவும் கேட்கிறான்.

முனிவனும் அப்படியே ஆகட்டும் என வரம் அளிக்க ராமபிரானும் மகிழ்ச்சி அடைகிறார்.நன்றியின் உருவகமாகவே ராமன் மாறி விடுவதை பார்த்து வியந்து நிற்கிறோம்.

பிறகு ஆசிரமத்தில் இருந்து கொண்டே அநுமனைப் பார்த்து, மாருதி! நீ இன்றைக்கே விரைந்து அயோத்தி செல்! எனக்கு ஒரு தீமையும் இல்லை என்பதை பரதனுக்கு சொல்! அவன் நெருப்பில் புகுவதை தடுத்து நிறுத்தி விடு என ராமன் உரைக்க, இராமன் அளித்த கணையாழியை கையில் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான் அநுமன்.

அநுமன் விரைந்துசென்று அயோத்திக்கு அருகில் தவக் கோலத்தில் காட்சி  அளிக்கும் பரதனைப் பார்த்து திடுக்கடைந்து வியந்து நிற்கிறான்.

மரவுரி தரித்த கோலத்தில் சடைமுடி தாங்கி அழுக்குக் கோலத்தில் இருக்கிறான் பரதன்.

ராமனை பல்லாண்டுகள் பார்க்காததால் கண்கள் உள்ளடங்கி முகம் மிக வாடி இருந்தது.

பக்திப்பெருக்கில் தியானக் கோலத்தில் இருக்க, இரு கண்களிலும் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அண்ணன் வரக்கூடிய தென்திசையையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.

அவன் குறித்த நேரத்தில் வராமையால் மயக்கம் அடைந்து கீழே வீழ்கிறான்.

இராமனுக்கு துன்பம் ஏதாகிலும் நேர்ந்துவிட்டதோ என கலங்குகிறான்.

என்னை அரசின் மேல் ஆசை கொண்டேன் என நினைத்து வாராமல் இருந்து விட்டானோ தமையன் என்றெல்லாம் நினைத்து வேதனையில் புழுவாகத் துடிக்கிறான்.

சத்ருக்னனை அழைத்து தம்பி!
சொன்ன நாளில் அண்ணன் வரவில்லை.
யான் தீயில் வீழ்ந்து உயிரை விடுவேன்.
நீ என் சொல்லைத் தட்டாமல் அயோத்தியின் அரசனாக பொறுப்பேற்க வேண்டும் என்கிறான்.

இதைக் கேட்டவுடன் சத்ருக்னன் திடுக்கிட்டு,உடல் நடுக்கம் அடைகிறான். தன் இரு காதுகளையும் பொத்திக்கொண்டு
அண்ணா! என்னை என்னவென்று நினைத்துக்கொண்டீர்கள்!

நாட்டை விட்டு காட்டை ஆள ராமன் சென்றான்.
அவனைக் காப்பாற்ற அவன்பின்னே லட்சுமணன் என்னும் தம்பி சென்றான்.
காட்டுக்குள் போனவன் குறிப்பிட்ட நாளில் வரவில்லையே என நினைத்து தன் இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்கிறான் பரதன் என்ற இன்னொரு தம்பி

ஆனால் இவர்களுடன் பிறந்த நான்மட்டும் அரசை ஆள்வேனாம்.
மிக நன்றாக இருக்கிறது.

அண்ணா! ராமன் காட்டுக்குச் செல்ல பரதன் நாட்டை ஆண்டான் என்ற பழிச்சொல்லில் இருந்து மீள நீ தவம் செய்தாய்!

நீ இறந்த பின் நான் உயிரோடு இருக்கலாம் என நீ எண்ணுவது நீ உயிரோடு இருக்கும் போதே உன்னை அகற்றி விட்டு நான் அரசாள்வது போன்றதே என மனம் நைந்து உள்ளம் உடைகிறான் சத்ருக்னன்.

அண்ணன் தன்னை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையே என்ற வேதனை சத்ருக்னனின் நெஞ்சை பிழிகிறது.

கம்பனின் வரிகளில் காண்போமா!

*கானாள நிலமகளைக் கைவிட்டுப் போனானைக் காத்துப் பின்பு போனானும் ஒரு தம்பி:* *போனவன்தான் வரும் அவதி போயிற்று என்னா,ஆனாத உயிர்விட என்று அமைவானும் ஒரு தம்பி:* *அயலே நாணாது,யானாம் இவ்வரசாள்வென்?என்னே இவ்வரசாட்சி! இனிதே அம்மா!*

*மன்னின்பின் வளநகரம் புக்கிருந்து
வாழ்ந்தானே,பரதன் என்னும் 
சொல் நிற்கும் என்றஞ்சிப் புறத்திருந்தும் அருந்தவமே தொடங்கினாயே.!என்னின்பின் இவன் உளனாம் என்றே உன்
அடிமை உனக்கு இருந்ததேனும்
உன்னின்பின் இருந்ததுவும் ஒருகுடைக்கீழ்
இருப்பதுவும் ஒக்கும் என்றான்.

சகோதரத்துவத்தின் மேன்மையினை -மிக நேர்த்தியாக கம்பனைத்தவிர வேறு தமிழ் இலக்கியங்களில் சொல்லப்படவில்லை. அதனால் தான் என்னவோ பாரதியும்  *யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல* என முதன்மையாக வைத்து போற்றினான் போலும்!!

*கம்பர் புகழ் வாழ்க

கம்பர் கவி மலர் தொடரும்

தே.இரா.வீரராகவன்